எருமை மாடுகளை மேய்த்திருக்கிறீர்களா?
எனக்கு அந்த அனுபவம் உண்டு. என் மாமா வீட்டிலிருந்து தங்கிப் படித்தேன். அவர் ஒரு முஸ்லீம்
தோட்டத்தை பராமரிக்க அங்கேயே தங்கியிருந்தார். சுமார் 24 ஏக்கர் பரப்பளவில் உள்ள அங்கு
தென்னை, கரும்பு. நெல், கத்தரி, தக்காளி, சோளம், என பலவற்றை நானும் உடனிருந்து பயிர்
செய்திருக்கிறேன். அவர் நிறைய மாடுகளை வைத்திருத்தார். பசுமாடுகள், எருமை மாடுகள் பலவும்
கோழிகள் சிலவும் அவர் வளர்த்தார். மாடு மேய்ப்பது என்பது ஒரு அலாதியான சுகம். அதுவும்
எருமை மாடுகளை மேய்ப்பது என்பது மிக சுலபம். ஏனென்றால் அதன் மேல் அமர்ந்து கொண்டு நாம்
அதனை மேய்த்துவிடலாம். ஆனால் பசுமாடுகளை அப்படி மேய்க்க முடியாது… அது அதுபாட்டுக்குத்தான்
மேயும் அதன் பின்னேயே இருக்க வேண்டும். இல்லையென்றால் பக்கத்து தோட்டத்தில் நுழைந்து
நம்மை சண்டைப் போட வைத்துவிடும்.
காலையில் எழுந்து மாட்டுச்சாணங்களை
எல்லாம் எடுத்து ஓரிடத்தில் கொட்டி விட்டு மாடுகளை குளிப்பாட்டி அதற்கு தேவையான உணவை
புல் தான் கொடுத்துவிட்டு இன்னும் பிற வேலைகளைப் பார்க்கச் செல்வோம்.. பால்காரர் வந்து
பால் கறப்பார். பிறகு எங்களுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டு அவருக்கு விற்றுவிடுவோம்…
நெற்பயிர்களுக்கு தண்ணீர் விட
மோட்டார் போட வேண்டும். தென்னைக் கன்றுகளை நட்டு அதற்கு நீர்ப் பாய்ச்சுவது சற்று கடினமான
வேலையாகத் தான் தெரிந்தது. இருந்தாலும் நானும் என் சித்தியும், அதற்கு போட்டி போட்டு
தண்ணீர் ஊற்றுவோம்…
மதியம் தான் எனக்கு பள்ளி இருக்கும்.
அதனால் காலையில மாடு மேய்ப்பேன். அதுவும் ஒரு
எருமை மாட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பள்ளிப் படிப்பை படித்தவாறு இருப்பேன்…
நான் முதல் ரேங்க் வாங்க சில காரணங்களில் அந்தமாடு எனக்கு எந்த தொந்தரவும் தராமல் படிக்க
விட்டதே…