இளைப்பாறுதல் 3

வகுப்புகள் என்றால் வெறும் எழுத்துக்களை படிக்கவும் எண்களை எண்ணுவதற்கும் சொல்லிக்  கொடுக்கும் இடம் மட்டுமல்ல… நிறைய நண்பர்கள் கிடைக்குமிடம்… நமக்கு வாழ்வைச் சொல்லித்தரும் ஆசான் நிறைந்த இடம். வகுப்புகள் எப்பொழுதுமே தேர்வுகள்  அற்ற வெறும் விளையாட்டு திடலாக இருப்பது என்னவோ நமது தொடக்கப்பள்ளிகளில் தான். பாஸ், பெயில் இது எதுவும் அங்கு கிடையாது. வெறும் கற்றுக்கொள்ளுதலும் கற்பித்தலும் மட்டுமே நிகழுமிடம்….
எனக்கு நிறைய அனுபவங்கள் உண்டு…

தெய்வாணை டீச்சரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது… எல்லோருக்கும் அப்படித்தான்… தங்களுடைய முதலாம் வகுப்பு டீச்சர் எப்பொழுதுமே கொஞ்சம் உசத்திதான்…
ஒரு ஆசிரியராக நமக்கு முதன் முதலாக காட்சி தருபவர் அவராகத்தானே இருக்கமுடியும். அவரை எப்படி மறக்க முடியும்…. என்னுடைய பள்ளி இறுதிநாள் வரை அவரது நினைவுகள் என்னுடன் சுமந்தவண்ணம் இருக்கிறேன்… ஏனென்றால் எல்லோரும் ஆசிரியர்களிடம்தானே அடி வாங்குவார்கள்… நான் அவரையே திருப்பி அடித்துவிட்டேன்… முதன் முதலாக தண்டனையை எனக்கு உணர்த்தியவரும் அவர்தான். அதனால்தான் நமது அடிமைச் சமுகத்தில் என்னால் வாழ முடிகிறது….
யாருக்காவது நாம் அடிமையாகத் தான் வாழவேண்டிய நிலை உள்ளது…
விளையாட்டாக ஒரு சிலவற்றை நாம் பேசியிருப்போம்… கடன் வாங்குவதற்கு முதலில் சொல்லித் தருபவர் கணக்கு டீச்சர் தான் என்று…. ஏன் என்றால் சுழியத்தில் ஒன்று போகுமா? போகாது டீச்சர்….
ம்…
அப்ப நாம பக்கத்துல ஒன்ன கடன் வாங்கணும்…
இப்ப பத்து…
பத்துல ஒன்பது போச்சுனா ஒன்று…
இப்படி கடன் வாங்குவதைச் சொல்லித் சொல்லித் தான் நாம் கணக்குப் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…
மதிய உணவுத் திட்டம் அல்லது சத்துணவு திட்டத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள்…. இதில் எத்தனை பேர் அந்த உணவை உண்டு படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது… ஆனால் சத்துணவு பெயரில் மட்டுமே இருக்கும்…
சத்தாக இருக்காது…
அரிசி நிறைய சத்தாக இருக்கும்… (அதாவது குண்டாக இருக்கும் ரேசன் அரிசிகள்) இவைகள் கிடைக்காத தினம் உணவே இல்லாத கிராமங்களை நாம் பார்க்க இந்தியாவில் இருக்கிறது….
ஆனாலும்… எனக்கு அந்த உணவு சிறிதளவும் பிடிப்பதில்லை….
என்னச் செய்வது பலகாலம் அந்த உணவை தின்றுதான் இந்த உடல் வளர்ந்திருக்கிறது…
அந்த சாம்பாரில் சோயா கலந்து கொடுப்பார்கள்… சாப்பிட ஒரு மாதிரி இருப்பதால் சாப்பாடு மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டில் வந்து குழம்பு ஊற்றிச் சாப்பிடுவேன்…
எங்க அம்மா எனக்காக ஏதாவது செய்து வைத்திருப்பார்…
இன்னும் ஒரு வேடிக்கை கதை இருக்கிறது… என்னுடன் தான் என் தங்கையும் பயின்றால்… பாவம் என்னால் அவளும் ஒன்னாவது வகுப்பில் பெயிலாகிப் போனாள்…
அண்ணன் தங்கை இருவருக்குமான இடைவெளி பற்றி யோசித்து இந்த ஆசிரியர்கள் இதைச் செய்திருக்கிறார்கள்…

முதல் தரத்தில் தேரக்கூடிய மாணவனாக இருந்த நான் ஒன்னாவது பெயிலாகித்தான் போனேன் என்பது வேடிக்கையான ஒன்று….

லேபிள்கள்: