இளைப்பாறுதல் 2

நாம் நினைத்தவற்றைச் செய்துமுடிக்க வேண்டுமென்றால் யாராவது எதையாவது சொல்லிவிடுவார்களா என்று அஞ்சவேண்டிய பருவத்திற்கு நாம் வந்துவிட்டோம்… ஆனால் குழந்தைப் பருவம் அப்படியில்லை…
மாங்காய் வேண்டுமென்று நினைத்தால் அதற்கு அழுகை போதும்…
நினைத்த மாத்திரத்தில் சில காரியங்களைச் செய்துவிடுவோம்…
அடுத்தவன் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மாங்காய் திருடி சாப்பிடுவதில் தொடங்கி…
புளியங்காய் பொறுக்கி திண்பதில் நுழைந்து…

நாவல் மரம், ஆற்றங்கரைக் குளியல்… கூடுதலாக சிறு சிறு விளையாட்டுகளிலே தொலைந்து போகிற அந்த காலம்…
எல்லோரின் நினைவுகளிலும் இத்தகைய அனுபவம் நிகழ்ந்திருக்குமா என்பது ஐயம்.. வாய்த்தவர்கள் பாக்கியவான்கள்…
ஆறு… அதைப்பற்றிக் கூறியாகியே வேண்டும்… ஆறுகள் தான் கிராமத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது. அவற்றில் கிடைக்கின்ற தண்ணீர் கிராமங்களின் விவசாய பாசனம் செழிப்புற காரணமாக அமைகிறது. ஆறுகள் வற்றிப் போகிற பொழுதுதான் கிராமங்களில் கூட தண்ணீர்ப் பஞ்சம் வந்தவிடுகிறது…
ஐந்து வருடம் மழை இல்லாமல் போன அந்த வருடத்தில் தான் தண்ணீர்ப் பஞ்சம் என்ன என்பதை நாங்கள் உணர்ந்தோம்…
மிக ஆழமான கிணற்றில் ஊற்றெடுத்த ஓரடி தண்ணீருக்காக ஊரில் உள்ள பல குடும்பங்கள் நின்ற அந்த தருணம்… ஓடி ஓடி தண்ணீரைச் சேமித்து வைத்து ஞாபகங்களை மறக்கவே முடியாது…
ஆறுகள் இல்லையென்றால் பல வருடங்கள் நாங்கள் இன்பமான தருணங்களை இழந்திருப்போம்…
மழைப் பொழிவில் அந்த ஆறு சற்று அதிகமான தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்… அதுவும் பேருந்து செல்வதற்காக கட்டப்பட்ட அந்த சிறிய அணையில் ஒரு பக்க துவாரங்களின் வழியே சென்று அடுத்தப்பக்கம் வரும்பொழுது கிடைக்குமே அந்த சுகம்… அடடா… அடடா… இதற்காக எத்தனை முறை வீட்டில் அடிவாங்கியிருப்போம்… இருந்தாலும்… ஆற்றில் குளிக்க நாங்கள் தவறுவதில்லை… அடிகள் சற்றுநேர வலி…
ஆறுகள் அப்படியில்லை… அந்த ஆற்று நீரில் நீந்தி விளையாடி மகிழ்ந்து கிடந்ததை இன்று நினைத்தாலும்… அத்தனை ஆனந்தம்… அன்று அடித்ததாக நினைவுகள் வர மறுக்கிறது. ஆனால் அந்த ஆறுகள்… அந்த நீச்சல் விளையாட்டு… நீர்விளையாடல் என்பது எத்தனை சுகம்…
பேருந்துகள் கடந்த செல்லும் போது வீசும் அந்த தண்ணீர் நம் முகத்தில் பீச்சி அடிக்கின்ற பொழுது ஆ வென்று ஆனந்தத்தில் கூவிய நினைவுகள் இன்னும் பசுமையான தருணங்கள்…
மீன்கள் பிடித்து அதனைச் அப்படியே சுட்டு அரைவேக்காட்டில் தின்ற அந்த ருசி இன்னும் அப்படியே நாவில் இருக்கிறது…
சின்ன ஆற்றில் வரும் தண்ணீரும்  பெரிய ஆற்றில் வரும் தண்ணீரும் கலக்கும் அந்த கூடல் இடத்திலிருந்து ஆறு பேருந்து கடக்கும் அந்த சிறிய அணை வரை பரந்து விரிந்து கிடக்கும்… அதன் அழகு வார்த்தைகளில் விளக்கிவிட முடியாது… நீங்களே கற்பனைச் செய்துகொள்ளுங்கள்….

ஒன்னாவது சேர்ந்து பின்னாடி நடந்த கதைகள் ஏராளம் இருக்கு…. கேக்கலாம்… இளைப்பாறலாம்….

லேபிள்கள்: