நிறைய பேச இருக்கிறது. யாரிடம்
என்பது தெரியவில்லை. நீங்கள் கேட்கத் தயாராக இல்லை. நான் சொல்வதற்கு தயாராக இருக்கலாம்…
ஏன் கேட்க வேண்டும். நீ யார் என்ற வினாக்கள் துருத்திக் கொண்டு நிற்கும். நீங்கள் கேட்பதற்கு
இல்லையென்றாலும்…
சொல்வதற்கு நான் தயாராகி விட்டேன்…
உங்கள் பிறப்பைப் பற்றி உங்களுக்கு
நிச்சயம் ஏதேனும் சில கதைகள் கேட்டிருக்கக் கூடும். வயிற்றில் இருந்தபோது நிறைய வலி
கொடுத்துவிட்டான். ஆசுபத்திரியில் பிறந்தான்… வீட்டில் பிறந்தவன் இவன்… இது என்று அது
என்று பலவாறு ஏதேனும் ஒன்றில் நீங்கள் பிறந்த கதைப் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்திருக்கும்…
எது எப்படியோ நான் என் கதையைச்
சொல்ல ஆரம்பித்துவிட்டேன்…
எண்பதுகளில் பெரும்பாலும் கிராமங்கள்
உயிர்ப்பித்திருந்த காலம்… திரைபடங்கள் கூட கிராமத்தைச் சுற்றியே பிண்ணப்பட்டிருக்கும்…
அத்தகைய ஒரு கிராமத்தில் மலையடிவாரத்தில்
ஒரு சின்னக் குடிசையில் நீ பிறந்தாய் என்று என் சொந்தங்கள் பலமுறைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்….
இப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கின்ற
பொழுது அந்தப் பக்கம் போனால் யாராவது அதனை ஞாபகப்படுத்துவர்.
நீ இங்கதான பொறந்த…
ம்
வேறென்ன சொல்ல முடியும்…
ஒரு கிராமத்தான் இந்த சென்னையில்
வந்து சேர்ந்த பொழுதே நிறைய மாற்றங்களுக்கு ஆட்படவேண்டியவனாகிறன்…
நான் அப்படியில்லை… இயல்பாகவே
ஒரு தெளிவு…
அதனால் சென்னை என்னை அழகாகவே ஏற்றுக்கொண்டது…
ஏமாறுவதற்கும் ஏமாற்றுவதற்கும்
இரண்டுக்குமே எனக்கு அனுபவம் தான்…
பசுமை நிறைந்த கிராமங்களை நான்
என்னுடைய 20வது வயதிலேயே தொலைத்திருக்கிறேன். சென்னை என்னை வெகுவாக சுருட்டிக்கொண்டது.
நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் கிராமங்கள் வேகமாக மாறிவருகிறது. மாறுவது
இயல்புதானே என்று நீங்கள் கேட்கலாம். கிராமம் கிராமமாக வளர்ச்சி பெறுவது இயல்பாக இருக்கலாம்.
ஆனால் மனிதக் கூடுகள் நிறைந்து வயல்கள், தோட்டங்கள், விலங்குகள் என பலவற்றை கிராமங்கள்
தொலைத்து வருகிறது.
வெகுநாட்களுக்குப் பிறகு கிராமங்கள்
குறித்த நினைவுகள் வருகிறது…
மனிதர்களின் இயல்புகள் எத்தனை
அழகானவை என்பதை அவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். நகரம் எப்படி மனிதர்களை
வேகமாக தன்னலமாக சிந்திக்கத் தூண்டுகிறது என்பதை எண்ணி நான் ஆச்சரியப்படுவதுண்டு.
நமக்கென்று இருந்த விருந்தோம்பல்
முறைகள் காபி டே க்களில் களவாடப்படுவதை உணர முடிகிறது.
வெறுமனே முகத்தில் ஒரு சின்னப்
புன்னகைக் கூடத் தோன்றுவதில்லை.
மணலில் செங்கற் கற்களை வைத்து
பேருந்து ஓட்டம் ஓட்டியதை நினைத்தால் அவ்வளவு ஆனந்தம். ஆனால் இங்குள்ளவர்களுக்கு சிறிய
பேருந்து பொம்மைகள் கிடைக்கிறது. அதனை பத்துக்கு பத்து என்ற அளவில் இருக்கும் சிறிய
வீடுகளிலேயே ஓட்டிவிட்டு முடிந்துவிடுகிறது அவர்களது விளையாட்டு பருவம்…
அம்மா அதற்குள்ளாக ஏ… பி… சி..
டி… சொல்லு…
இது ஆப்பிள் இது பணானா என்று ஆங்கிலத்தைச்
சொல்லித் தரும் கான்வெண்ட் டீச்சராகிவிடுகிறார்.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பருவத்தில்
கிடைக்கக்கூடிய சின்ன சின்ன மகிழ்ச்சிகள் குழுவாக விளையாடும் பொழுது நான் ரசித்தன…
இன்றைய காலக்கட்டத்தில்… குறிப்பாக சென்னைவாழ் குழந்தைகளுக்கு கிடைப்பதேயில்லை…
என் சிறுவயதில் செங்கற் கற்களில்
பஸ் ஓட்டுவது, திருடன் போலிஸ் விளையாடுவது, ஒழிந்து விளையாடுவது, பம்பரம், கோலி, கில்லி,
பட்டம் என்று காலத்திற்கேற்ப குழுவாக விளையாடி வீட்டை மறந்த நேரங்களைத் தொலைத்த அனுபவம் இன்றும் பசுமையாக என் நினைவுகளில்
இருக்கிறது.
எங்கள் சுதந்திரத்தில் எப்பொழுதுமே
பெற்றோர்கள் தலையீடு செய்வதில்லை…
என்ன விளையாட்டு என்று சில நேரங்களில்
திட்டினாலும், அடித்தாலும் கூட அடுத்த நொடியில் அந்த பிள்ளை மனம் அதையெல்லாம் மறந்து
மீண்டும் விளையாடச் சென்றுவிடும்… அதில் சந்தோஷம் கொள்வர் பெற்றவர்கள்…